தலச்சிறப்பு |
விநாயகப் பெருமான், கஜமுகாசுரனை வதம் செய்தபோது அசுரனது குருதி பெருகி இந்த இடம் முழுவதும் சிவப்பு நிறமாக மாறியதால் 'செங்காட்டங்குடி' என்று பெயர் பெற்றது. அசுரனை வதம் செய்த பிறகு விநாயகர், சிவபூஜை செய்ததால் இத்தலம் 'கணபதீஸ்வரம்' என்றும் பெயர் பெற்றது.
இத்தலத்து மூலவர் 'உத்தராபதீஸ்வரர்', 'கணபதீஸ்வரர்' என்னும் திருநாமங்களுடன், சிறிய லிங்க வடிவில் காட்சி தருகின்றார். அம்பிகை 'திருகுகுழல் உமைநங்கை' என்னும் திருநாமத்துடன் காட்சி தருகின்றாள்.
கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, அஷ்டபுஜ துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் விநாயகர், வள்ளி, தேவசேனை சமேத சுப்பிரமண்யர், நால்வர், நாகர், பைரவர் மற்றும் நவக்கிரகங்கள் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன. மேலும் புஜங்கலலித மூர்த்தி, கஜசம்ஹார மூர்த்தி, ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி, காலசம்ஹார மூர்த்தி, கங்காள மூர்த்தி, திரிபுரசம்ஹார மூர்த்தி, பிட்சாடன மூர்த்தி, பைவர மூர்த்தி, உருத்திராபதி (கங்காள மூர்த்தி) என்று சம்ஹார மூர்த்திகள் அனைவருக்கும் திருவுருவச் சிலைகள் இருப்பது வேறு எந்தக் கோயிலிலும் இல்லை.
ஒருசமயம் இப்பகுதியில் வசித்து அம்மன் பக்தை ஒருவர் கர்ப்பமுற்றிருந்தாள். ஒருநாள் இரவு அப்பெண்ணுக்கு பிரசவ வலி எடுக்க, அச்சமயம் மழை பெய்ததால் வெளியில் சென்றிருந்த அவரது தாயார் ஆற்றின் அக்கரையில் மாட்டிக் கொண்டார். அதனால் அம்பிகையே அப்பெண்ணின் தாயார் வடிவத்தில் வந்து பிரசவம் பார்த்தாள். சூல் - கரு. அதனால் இங்குள்ள சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள திருமருகல், திருப்புகலூர், இராமனதீஸ்வரம் மற்றும் இத்தலத்தில் உள்ள அம்மனுக்கும் 'சூலிகாம்பாள்' என்னும் திருநாமம் ஏற்பட்டது. அதுமட்டுமல்லாது பிரசவம் பார்த்து இரவு தாமதமாகச் சென்றதால் அம்பாள் உள்ளே செல்லாமல் வெளியிலேயே நின்று விட்டாள். அதனால் இந்த நான்கு கோயிலிலும் அம்மன் சன்னதி வெளியிலேயே உள்ளது. எனவே, அர்த்தஜாம பூஜையின்போது அம்பிகைக்கு சம்பா அரிசி, மிளகு, சீரகம், உப்பு, நெய் கலந்த சாதம் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.
சிறுத்தொண்ட நாயனார் முக்தி பெற்ற தலம். சிவபெருமான் கங்காளர் வடிவெடுத்து சிறுத்தொண்டர் நாயனாரிடம் வந்து பிள்ளைக் கறி கேட்ட தலம். சிறுத்தொண்டர் தனது ஒரே மகனான சீராளனை கறியாக சமைத்து பரிமாற, இவைறன் திருவருளால் அவன் மீண்டும் உயிர்ப்பித்து எழுந்த தலம். சிறுத்தொண்ட நாயனார், அவரது மனைவி, மகன் சீராளன், சந்தன நங்கை ஆகியோரது திருவுருவச் சிலைகளும், கங்காளர் உற்சவ மூர்த்தியும் உள்ளன. வாதாபியிலிருந்து சிறுத்தொண்டர் எடுத்துக் கொண்டு வந்த வாதாபி கணபதி திருவுருவம் இத்தலத்தில்தான் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
உத்தராபதீஸ்வரர் சிறுத்தொண்டரிடம் அமுது கேட்டு வந்த மடம் தெற்கு வீதியின் கடைசியில் இருக்கிறது. சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்தன்று பிள்ளைக்கறி சமைத்த திருவிழா நடத்தப்படுகிறது.
இத்தலத்து முருகப் பெருமானை அருணகிரிநாதர் தமது திருப்புகழில் பாடியுள்ளார்.
திருஞானசம்பந்தர் இரண்டு பதிகங்களும், திருநாவுக்கரசர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|